கவர்னர் கிரண்பெடி மீது பிரதமரிடம் புகார் முதல்-அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்


கவர்னர் கிரண்பெடி மீது பிரதமரிடம் புகார் முதல்-அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 26 July 2020 6:18 AM IST (Updated: 26 July 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடி மீது பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. எழுப்பிய பிரச்சினைகளை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

சிவா (தி.மு.க.): தாசில்தார் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரி தவறு செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையும் வந்துள்ளது. அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளர்கள்.

அமைச்சர் கமலக்கண்ணன்: யாரோ ஒருவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அதிகாரமில்லாத காவல்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு தாசில்தாரை அவமானப்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கலால் துறை தொடர்பான வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்பழகன் (அ.தி.மு.க.): கலால்துறை சட்டப்படி ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் தனது வீட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் காவல்துறையினர் தாசில்தார் வீட்டிற்கு சென்று 2, 3 மதுபாட்டில்களை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் கமலக்கண்ணன்: மாநில வருவாயில் 4-ல் ஒரு பங்கு கலால்துறை மூலம் வருகிறது. மதுபான விற்பனையில் விதி மீறல் என்றால் அபராதம் விதிக்க தான் இடம் உள்ளது. ஆனால் ஒரு சில மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்துள்ளனர். சிலவற்றை இடைநீக்கம் செய்துள்ளனர். முன்பு மாதந்தோறும் கலால் துறை மூலம் சுமார் ரூ.90 கோடி அளவுக்கு வருமானம் வந்தது. அதன்படி கடந்த 4 மாதத்தில் ரூ.350 கோடி வருமானத்தை எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது கிடைத்தது வெறும் ரூ.40 கோடி தான். கலால் துறை துணை ஆணையரின் அதிகாரத்தில் முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ தலையிட முடியாது. இப்படி இருக்க தற்போது உள்ள நிலை அனுமதித்தால் புதுச்சேரி இன்னொரு சாத்தான்குளம் ஆகிவிடும்.

அன்பழகன்: மதுபான விற்பனைக்கு தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கார்ப்பரேஷன் அமையுங்கள் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். நீங்கள் தான் ஒருசில மதுபான வியாபாரிகளை சம்பாதிக்க விடுகிறீர்கள்.

பாஸ்கர் (அ.தி.மு.க.): மதுபான வியாபாரிகளுக்காக இவ்வளவு பேசுகிறீர்கள். இந்த குறைவான காலத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஒரு சிலரது மிரட்டலால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதை ஏன் யாரும் பேசுவதில்லை. கலால் துறைக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம். இதன் பின்னால் என்ன நடந்தது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி: சுகாதாரத்துறை அதிகாரி விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் வருத்தம் தெரிவித்து இந்த விஷயத்தில் கவர்னரின் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல் மதுபான விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story