விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 262 பேருக்கு கொரோனா - மேல்மலையனூரில் முதியவர் சாவு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மேல்மலையனூரில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,766 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 31 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 1,985 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 750 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேல்மலையனூர் அடுத்த பெருவளூரை சேர்ந்த 83 வயது முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய உமிழ்நீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றது. இதில் மேலும் 157 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் திண்டிவனம் சார்பு நீதிபதி 39 வயதுடையவர், மாஜிஸ்திரேட்டு 33 வயது, சத்தியமங்கலம் போலீஸ்காரர், செஞ்சி போலீஸ் ஏட்டு, பெண் போலீஸ், மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர், முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள 4 செவிலியர்கள், விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள், மல்லிகைப்பட்டு ரேசன்கடை விற்பனையாளர், திண்டிவனம் அரசு போக்கவரத்து கழக பணிமனையின் மெக்கானிக், விழுப்புரம் தனியார் மருத்துவமனை செவிலியர் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,923 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 115 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 833 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 311 பேரின் கொரோனா பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இவர்களில் 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சிலர் கொரோனா தடுப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 833-ல் இருந்து 2 ஆயிரத்து 938-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story