அய்யம்பேட்டை அருகே, காதல் விவகாரத்தில் பட்டதாரி பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைப்பு - பெண்கள் உள்பட 3 பேர் கைது
அய்யம்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் பட்டதாரி பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே காவலூர் தோட்டத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் கோபினி(வயது 23). பி.பி.ஏ.பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு பூதலூர் அருகே சேங்கலூரில் உள்ள தனது மாமா இளையராஜா வீட்டில் தங்கி இருந்தார். இளையராஜாவின் மனைவி விஜயலட்சுமியின் தம்பி சரவணகுமார்(25).
இவர், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது அக்கா வீட்டிற்கு வந்து செல்லும்போது, கோபினிக்கும், சரவணகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கோபினிக்கு, சரவணகுமார் அண்ணன் முறை வேண்டும் என்பதால், இதனை உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் கோபினியும், சரவணகுமாரும் தங்கள் காதலை தொடர்ந்தனர். இதனால் மனம் மாறுவதற்காக கோபினியை, அய்யம்பேட்டை வேதாந்தரி நகரில் உள்ள அவருடைய அத்தை வடிவேஸ்வரி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கோபினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக அவரை மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசில் கோபினி அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று சரவணகுமார், அவருடைய அம்மா வாசுகி, அக்கா விஜயலட்சுமி, மாமா இளையராஜா, உறவினர் ரமேஷ் ஆகியோர் தனது அத்தை வீட்டிற்கு வந்து தன்னிடம் பேசியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு அவர்கள் ஓடி விட்டதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி(50), விஜயலட்சுமி(29), ரமேஷ்(41) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சரவணகுமார், இளையராஜா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் பட்டதாரி பெண் மீது மண்எண்ணெய ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story