திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில், 100 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு


திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில், 100 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 July 2020 10:30 AM IST (Updated: 26 July 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்வரை 1,156 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் திருவாரூர் நகரில் காய்கறி கடை உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருடைய தந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காந்தி சாலையில் உள்ள சாக்கு வியாபாரி ஒருவர், ஜவுளிக்கார தெருவில் ஒருவர், திருவாரூர் அருகே புலிவலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் என 5 பேர் தொற்றில் சிக்கியுள்ளனர்.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது. முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த சுகாதார மேற்பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

இதேபோல் கூத்தாநல்லூர், வலங்கைமான் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,256 ஆக உயர்ந்துள்ளது.

Next Story