பாலம் கட்ட அனுமதி வழங்காத வனத்துறையினரை கண்டித்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை - ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு


பாலம் கட்ட அனுமதி வழங்காத வனத்துறையினரை கண்டித்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை - ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு
x
தினத்தந்தி 26 July 2020 5:30 AM GMT (Updated: 26 July 2020 5:18 AM GMT)

கொள்ளிடம் அருகே பாலம் கட்டும் பணியை நிறுத்திய வனத்துறையினரை கண்டித்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு அளித்தனர்.

கொள்ளிடம்,

கொள்ளிடம் அருகே கொட்டாய்மேடு மீனவர் கிராமத்துக்கு செல்ல பக்கிம்காம் கால்வாய் குறுக்கே பழைய பாலம் உள்ளது. இந்த பாலம் உடைந்துவிட்டதால் அந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தில் பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான இடம் என கூறி பாலம் கட்ட தடை விதித்தனர். அதனை தொடர்ந்து இதுவரை வனத்துறையினர் மீண்டும் பாலம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்தநிலையில் பாலம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்காத வனத்துறையினரை கண்டித்தும், உடனடியாக பாலம் கட்ட வலியுறுத்தியும் கொட்டாய்மேடு கிராமத்தில் உள்ள 12 விசைப்படகுகள், 100 பைபர் படகுகள் மற்றும் 100 மரப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் புதிய பாலம் கட்ட இருக்கும் இடத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார், முனனாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story