கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி


கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2020 5:30 AM GMT (Updated: 26 July 2020 5:27 AM GMT)

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா முக கவசம் விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 29-வது வார்டு கோபிரளயம் பகுதியில் மருத்துவ முகாம் தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து செல்பவர் களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 73 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழக அளவில் 72 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த மார்ச் 24-ந்தேதி ஊரடங்கு காலத்தில் இருந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை களால் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்த வர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலும் குணமடை வர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாவட்டங்களில் சில இடங் களில் அவ்வப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்வது தான்.

எனவே பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். முக கவசம் அணியாமல் இருப்பது நோயை பரப்புவதற்கு காரணமாக அமைந்து விடுவதால் அது குற்றமாகும். திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 1,400 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை வசதி தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் ரேஷன் கடைகள் மூலம் விரைவில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மன்னார்குடி அருகே வீடு கட்டுவது தொடர்பாக நடைபெற்ற மோசடி குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழச்சியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story