தஞ்சை மாவட்டத்தில், முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர் - கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


தஞ்சை மாவட்டத்தில், முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர் - கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 27 July 2020 3:45 AM IST (Updated: 27 July 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

தஞ்சாவூர்,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவிய காலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாளடைவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் தினமும் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களில் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இந்த மாதத்தில் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த முழு ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமே காணப்படவில்லை. மக்கள் வீடுகளில் முடங்கினர். வாகனங்களும் இயக்கப்படாததால் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.

ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் ரோந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. நேற்றைய முழு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. மருந்துக்கடைகள், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மட்டும் இயங்கின. பெட்ரோல் பங்க்குகளும் நேற்று மூடப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் மருந்துக்கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story