தா.பழூர் அருகே, மின்னல் தாக்கி அய்யனார் கோவில் கலசம் விழுந்தது


தா.பழூர் அருகே, மின்னல் தாக்கி அய்யனார் கோவில் கலசம் விழுந்தது
x
தினத்தந்தி 26 July 2020 10:30 PM GMT (Updated: 27 July 2020 2:15 AM GMT)

தா.பழூர் அருகே மின்னல் தாக்கி அய்யனார் கோவில் கலசம் கீழே விழுந்தது.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது தா.பழூர் அருகே உள்ள வாழக்குறிச்சி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கருப்பசாமி, அய்யனார் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியது. இதில் கோபுர கலசம் சேதமடைந்து கீழே விழுந்தது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்ய சென்ற பூசாரி கோவில் கலசம் மீது மின்னல் தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த தகவல் காட்டுத்தீப்போல் ஊர் முழுவதும் பரவியதை அடுத்து பொதுமக்கள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் கலசத்தை மீட்டு பத்திரப்படுத்தி வைத்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்திற்கு அருகில் ஒருவர் வீட்டில் உள்ள தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பிடித்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்த மரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதால் அருகில் வசிப்பவர்களின் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் பழுதாகியது.

Next Story