கரூர் மாவட்டத்தில், 2 டாக்டர்கள் உள்பட புதிதாக 7 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில், 2 டாக்டர்கள் உள்பட புதிதாக 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 July 2020 4:00 AM IST (Updated: 27 July 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 2 டாக்டர்கள் உள்பட புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டம், குளித்தலையில் அரசு டாக்டராக வேலை பார்க்கும் 49 வயது ஆண் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு சளி, ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் குளித்தலையில் நடத்தி வரும் தனியார் கிளினிக் அடைக்கப்பட்டு, சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

இதேபோல கரூர் வெங்கமேடு கொங்கு நகரை சேர்ந்த 52 வயது டாக்டர் ஒருவருக்கும், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த 71 வயதுடைய முதியவருக்கும், அம்மன்நகரை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், இரும்புளிபட்டியை சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், தோட்டக்குறிச்சியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும், பெரியகுளத்துபாளையத்தை சேர்ந்த 55 வயது டெக்ஸ்டைல் தொழிலாளிக்கும் என மொத்தம் 7 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த 76 ஆண்கள், 35 பெண்கள், 3 குழந்தைகள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 122 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story