முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
திருச்சி மாவட்டத்தில், முழு ஊரடங்கினால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், சாலைகள் வெறிச்சோடின.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனா பரவலின் வேகம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் மட்டும் இன்றி அகில இந்திய அளவில் கொரோனா எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. அதே போல் பாதிக்கப்படுவோரின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள், கடைவீதிகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடந்த 1-ந் தேதியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. அந்தவகையில் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு அமலுக்கு வந்தது.
முழு ஊரடங்கின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதில் மெயின்கார்டு கேட், மேலப்புலிவார்டு சாலை, என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, மத்திய, சத்திரம் பஸ்நிலையம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், பாத்திர கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. நடைபாதை கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலும் திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு இருந்தன. மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், டீ, டிபன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் திறக்கப்படவில்லை. மருந்து கடைகள், பால் விற்பனை கடைகள் மட்டும் திறந்திருந்தன.
எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் திருச்சி பாலக்கரை மெயின்ரோடு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல, திருச்சி-சென்னை பைபாஸ் சாலை, மதுரை நான்கு வழிச்சாலை, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடின.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரேநாளில் 425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.73 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர, சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். முழு ஊரடங்கையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் மாநகரில் பல்வேறு இடங்களில் ரோந்து சென்றார்
எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தில் உள்ள சுங்கச்சாவடி வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சமயபுரம் கடைவீதி, நால் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் யாரும் வராமல் தடுக்கும் வகையில் கோவில் முகப்பு நுழைவு வாயில் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து இருந்தனர்.
மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி, நெம்பர்.1 டோல்கேட் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முசிறி, தா.பேட்டை, தும்பலம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் முசிறி பஸ் நிலையம், கைகாட்டி, பைபாஸ் சாலை உள்ளிட்ட பல இடங்கள் பொதுமக்கள் நடமாட்டம்இன்றி வெறிச்சோடியது. முழு ஊரடங்கையொட்டி முசிறி, தா.பேட்டை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, லால்குடி, கல்லக்குடி, துறையூர், உப்பிலியபுரம் போன்ற இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், துவாக்குடி, தொட்டியம், ஜீயபுரம், கே.கே.நகர், பொன்மலைப்பட்டி போன்ற இடங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story