200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு


200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு
x
தினத்தந்தி 27 July 2020 8:27 AM IST (Updated: 27 July 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை, கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாதத்தில் (ஜூலை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. அதன்படி நேற்று வாணியம்பாடியில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

நேற்று காலை 10.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும், அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அரசு டாக்டர்கள் சிவசுப்பிரமணி, டேவிட்விமல்குமார், நேதாஜி ஆகியோரிடம் கேட்டறிந்தார். கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவையான அனைத்துச் சிகிச்சைகளையும், உணவுகளையும் முறையாக அளிக்க வேண்டுமென டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

200 படுக்கை வசதிகள்

அதைத்தொடர்ந்து ஆலங்காயம் ஒன்றியம் ஜப்ராபாத் ஊராட்சி பகுதிக்குச் சென்ற கலெக்டர், அங்குள்ள வீடுகளையொட்டி திறக்கப்பட்டு இருந்த மளிகை, பெட்டிக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்பிறகு வீதி வீதியாகச் சென்றபோது, சமூக இடைவெளியின்றி அமர்ந்திருந்த மக்களை கலைந்து செல்லும்படியும், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரிக்குச் சென்ற கலெக்டர், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 200 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதையும், கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். அங்கு, தற்போது 150 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு அறையாகச் சென்று பார்வையிட்டார். நோயாளிகள் வந்தால் அங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தாசில்தார் சிவப்பிரகாசம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி, நகராட்சி ஆணையாளர் பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் அலி உள்பட பலர் உடனிருந்தனர்.

தடுப்புப்பணிகள் தீவிரம்

ஆய்வுக்குப் பின் நிருபர்களிடம் கலெக்டர் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாணியம்பாடியில் தொற்றால் பாதிக்கப்படுவோருக்குக் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் இக்கல்லூரியில் தற்போது 150 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 படுக்கைகள் இன்னும் ஓரிரு நாளில் அமைக்கப்படும். 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படும், என்றார்.

Next Story