பொதுமக்கள் வீட்டில் இருக்க வலியுறுத்தி கிரிக்கெட் வீரர் டோனி படத்துடன் விழிப்புணர்வு
திருப்பூர் மாநகர போலீசார் பொதுமக்கள் வீட்டில் இருக்க வலியுறுத்தி கிரிக்கெட் வீரர் டோனி படத்துடன் சமூக வலைதளமான முகநூல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்கள். இதுபோல் கொரோனா ஊரடங்கையும் மீறி வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களையும், அரசு அறிவுரையின்படி முககவசம் அணியாதவர்களையும் கண்டித்து வருகிறார்கள். இதுபோல் திருப்பூர் மாவட்டத்தில் இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று 4-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி முழு ஊரடங்காகும். இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, கிரிக்கெட் வீரர் டோனி புகைப்படத்தை பயன்படுத்தி மாநகர போலீசார் சமூக வலைதளமான முகநூல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து மாநகர போலீசார் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் கொரோனா தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் கொரோனா ஊரடங்கால் வீடுகளில் இருக்கிறவர்களில் அதிகமானோர் செல்போன்கனை பயன்படுத்துவார்கள். இதனால் இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். இதற்காக சோஷியல் மீடியா என்ற ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், 3 போலீசார் செயல்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பேட்டிங் செய்யும் இடத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் புகைப்படத்தையும், மற்றொரு படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர் பேட்டிங் செய்யும் இடத்தை விட்டு வெளியே வந்து அவுட் ஆவது போன்றும், மாநகர போலீசார் தளத்தில் பதிவிடப்பட்டது. இந்த விழிப்புணர்வு மீம்சை ஏராளமான வாலிபர்கள் பார்வையிட்டுள்ளனர்.மேலும், பகிரவும் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story