மேட்டூர் அணையில் சிறிய வலையை பயன்படுத்தி பிடித்த 100 கிலோ மீன்கள், 14 பரிசல்கள் பறிமுதல் - மீன்வளத்துறை அலுவலர்கள் நடவடிக்கை
மேட்டூர் அணையில் சிறிய வலையை பயன்படுத்தி பிடித்த 100 கிலோ மீன்களையும், 14 பரிசல்களையும் மீன்வளத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மீன்வளத்துறை மூலம் உரிமம் பெற்ற சுமார் 2 ஆயிரம் உறுப்பினர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்கள்.
மேட்டூர் மீன் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மீன் குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்த பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு விடப்படுகிறது. அவை வளர்ச்சி அடைந்தவுடன் உரிமம் பெற்ற மீனவர்கள் மீன்களை பிடித்து மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுப்பார்கள். இதற்குரிய தொகை மீனவர் சங்கம் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு மீன்களை பிடிப்பதற்கு மீன்வளத்துறை விதிமுறைகளை நிர்ணயித்து உள்ளது. இதன் அடிப்படையில் சிறிய வகை வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்கக்கூடாது என்பது விதிமுறை ஆகும். இந்தநிலையில் மேட்டூர் அணை வலதுகரை பகுதியில் மீன்வளத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது சிறியவகை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததை கண்டுபிடித்தனர். மீன்வளத்துறை அலுவலர்களை கண்டதும் மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கு சென்ற அலுவலர்கள் மீனவர்கள் பயன்படுத்திய 14 பரிசல்கள், 100 கிலோ சிறிய மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மேட்டூர் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மீனவர்கள் விதிமுறைகளுக்கு உள்பட்டு சிறிய வகை மீன்களை பிடிப்பதை நிறுத்தினால் மட்டுமே மேட்டூர் அணையில் மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணையில் சுமார் 35 முதல் 40 கிலோ வரை எடையுள்ள பெரிய மீன்கள் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த எடை கொண்ட மீன்கள் மேட்டூர் அணையில் காணமுடியவில்லை. எனவே மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து மீன்பிடித்தால் மீன்வளம் பெருக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story