கருவேப்பிலங்குறிச்சி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு


கருவேப்பிலங்குறிச்சி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 July 2020 11:51 AM IST (Updated: 27 July 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

கருவேப்பிலங்குறிச்சி அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் குறுவை அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் வகையில் அப்பகுதியில் உள்ள திருக்குமாரசாமி கோவில் அருகே தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 23-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் கோவில் இருப்பதால், இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கக்கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சிலர் புகார் அளித்தனர்.

இதனால் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தபடவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. இதையடுத்து தங்களது நெல்மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நிலையத்திற்கு அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு வந்த சிலர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை இங்கு செயல்படுத்தக்கூடாது. வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று கூறினர். இதற்கு ஏராளமான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்தாண்டு மட்டும் நேரடி நெல்முதல் நிலையத்தை செயல்படுத்தவும், வரும் ஆண்டுகளில் இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story