முழு ஊரடங்கு: நீலகிரியில் கடைகள் மூடல்; வெறிச்சோடிய சாலைகள்


முழு ஊரடங்கு: நீலகிரியில் கடைகள் மூடல்; வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 27 July 2020 12:41 PM IST (Updated: 27 July 2020 12:41 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி நீலகிரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடியது.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 5-ந் தேதி, 12-ந் தேதி, 19-ந் தேதி ஆகிய 3 ஞாயிற்றுக்கிழமைகளிடம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. நேற்று 4வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடித்தனர். அவர்கள் பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர்த்து, வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அனைத்து நுழைவாயில்களுக்கும் பூட்டு போடப்பட்டு இருந்தது. மார்க்கெட்டில் உள்ள 6 மண்டிகளில் காய்கறிகள் ஏலம் நடைபெறவில்லை. அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் இந்த மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மண்டிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சனிக்கிழமை ஏலம் நடந்தால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் காய்கறிகள் செல்ல ஞாயிற்றுக்கிழமை ஆகிவிடும். இதனால் முழு ஊரடங்கை மீறாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், ஏ.டி.சி., மணிக்கூண்டு, அப்பர் பஜார், சேரிங்கிராஸ், ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை, பேன்சி, தேநீர், பேக்கரி என அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை வெறிச்சோடியது. நடைபாதை மற்றும் சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. சரக்கு வாகனங்கள், லாரிகள், வாடகை வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.

முழு ஊரடங்கை மீறி யாரேனும் வெளியே அவசியம் இல்லாமல் சுற்றுகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். நீலகிரி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மலைப்பிரதேசமான ஊட்டியில் மழை பெய்யாததால் இதமான காலநிலை நிலவியது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு, கயிறு கட்டப்பட்டு இருந்தது. சேரிங்கிராஸ் சந்திப்பு, லவ்டேல் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்களில் வந்தவர்களிடம் எதற்காக செல்கிறீர்கள் என்று போலீசார் விசாரித்த பின்னரே அனுமதித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடப்பு மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டது. மேலும் ஆட்டோ, ஜீப், சுற்றுலா மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்பட வில்லை. ஆனால் வழக்கம் போல் பால் வினியோகம் நடைபெற்றது. மேலும் சில மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் இல்லாமல் காணப்பட்டது.

ஊரடங்கையொட்டி போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் நின்றிருந்தனர். அப்போது தடையை மீறி சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர். தொடர்ந்து தேவை இல்லாமல் சாலையில் வாகனங்களில் சுற்றி வந்த நபர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். இதேபோல் மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி, கொளப்பள்ளி உள்பட அனைத்து பகுதியிலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். மேலும் கர்நாடகா- கேரள மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது.

ஊரடங்கால் கோத்தகிரியில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், பால் பூத்துக்கள், செய்திதாள் விற்பனை செய்யும் கடைகள், மருந்து கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், ஒரு சில மருந்து கடைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்து எதுவும் இன்றி கோத்தகிரி நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story