நிலக்கோட்டை அருகே பரிதாபம்: தந்தையின் இறுதிச்சடங்குக்கு மாலை வாங்க சென்ற வாலிபர் விபத்தில் பலி
நிலக்கோட்டை அருகே தந்தையின் இறுதிச்சடங்குக்கு மாலை வாங்க சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி பலியானார்.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகன் ஜோதி முருகன் (வயது 32). இவர் நிலக்கோட்டையில் ஸ்டூடியோ வைத்திருந்தார். இவர் ஒரு அறக்கட்டளையின் தலைவராக இருந்து பல்வேறு சமூகசேவைகளையும் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆண்டிச்சாமி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக மாலை மற்றும் இதர பொருட் கள் வாங்க நேற்று அதிகாலை ஜோதிமுருகன் தனது மோட்டார்சைக்கிளில் நண்பர் முத்துசெல்வத்துடன் நிலக்கோட்டைக்கு சென்றார். வழியில் குண்டலப்பட்டி பிரிவை தாண்டி மோட்டார்சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் இருந்து வெளியே வந்த ஒரு மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் ஜோதிமுருகனும், முத்துசெல்வமும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜோதிமுருகன் பரிதாபமாக இறந்தார். முத்துசெல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தந்தையின் இறுதிச்சடங்குக்கு மாலை வாங்க சென்ற மகன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் விளாம்பட்டி கிராமத்தை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியது.
Related Tags :
Next Story