கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் தைரியமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு உதவினார்


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் தைரியமான முடிவுகளை எடுத்து மக்களுக்கு உதவினார்
x
தினத்தந்தி 27 July 2020 8:14 PM GMT (Updated: 27 July 2020 8:14 PM GMT)

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தைரியமான முடிவுகளை எடுத்தார் என்று பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநில பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஒரு வெட்கமற்ற அரசாங்கம் செயல்படுகிறது. அது முரண்பாடு மற்றும் சண்டைகள் நிறைந்தது.

பாரதீய ஜனதாவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவை வலுப்படுத்த வேண்டும். மாநில பாரதீய ஜனதா 67 ஆயிரம் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியுள்ளது. இதில் மூன்று அம்ச திட்டத்தை தகவல் தொழில்நுட்ப பிரிவு தொடங்க வேண்டும். இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் உரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள், மராட்டிய அரசின் தோல்வியை அம்பலப்படுத்தவும், மத்திய அரசின் சாதனைகளை அடிகோடிட்டு காட்டவும் வாட்ஸ்அப் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

தைரியமான முடிவை எடுத்தார்

கொரோனாவுக்கு மத்தியில் நமது பிரதமர் மக்களுக்கு உதவ சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் தைரியமான முடிவுகளை எடுத்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்து விவாதிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன. இது கொரோனா வைரஸ் நெருக்கடியை மோசமாக்க வழிவகுத்தது. இந்த நாடுகள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க தவறிவிட்டன. பிரதமர் நரேந்திர மோடியை போன்ற சக்திவாய்ந்த தலைவர் இல்லாதிருந்தால், தற்போதைய நெருக்கடியில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story