திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் கூட்டம், ஊரடங்கால் நடத்தப்படவில்லை. எனினும் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு போட்டுவிட்டு சென்றனர்.
இதற்கிடையே ஒரு தம்பதி, 2 குழந்தைகளுடன் மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த மண்எண்ணெயை 4 பேரும் தங்களுடைய உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். அதை சிறிதும் எதிர்பாராத போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 பேரையும் தடுத்து மீட்டனர். மேலும் 4 பேரின் மீதும் தண்ணீரை ஊற்றினர்.
தனியார் நிறுவன ஊழியர்
அதையடுத்து அவர்கள் 4 பேரையும், தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர்கள் நிலக்கோட்டை தாலுகா ராமராஜபுரத்தை சேர்ந்த முனிப்பாண்டி (வயது 35) மற்றும் அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என்பது தெரியவந்தது. இதில் முனிப்பாண்டி கொடைரோடு அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். அதேநேரம் அவருடன் வேலை செய்த சிலர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிறுவனத்தில் மீண்டும் வேலை கிடைக்காத நிலையில், போலீசாரும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story