தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 July 2020 7:52 AM IST (Updated: 28 July 2020 7:52 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் கட்டிடம் தரமானதாக இருக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

மதுரை, 


இளம் காளைகள் டிரஸ்ட் நிறுவனர் நேதாஜி கார்த்திகேயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை தமுக்கம் மைதானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழாவையொட்டி நடக்கும் பொருட்காட்சி பிரபலமானது. அது மட்டுமல்லாமல் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள், புத்தக கண்காட்சி போன்றவையும் இங்குதான் நடத்தப்படுகிறது. 350 ஆண்டுகள் பழமையான இந்த மைதானத்தில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மைதானம் தனது பாரம்பரியத்தையும், பழமையையும் இழக்க நேரிடும். எனவே அங்கு வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், “தமுக்கம் மைதானத்தில் இருந்த கலை அரங்க கட்டிடம் சேதமடைந்து இருந்தது. எனவே அதை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு, வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி செய்யப்படுகிறது. ஏற்கனவே கண்காட்சிகள், பொருட் காட்சி நடத்தப்பட்ட இடத்தில் எந்த கட்டிடமும் கட்டப்பட வில்லை. மொத்த பரப்பளவில் 5.60 ஏக்கர் பரப்பளவு இடம் மைதானமாகவே இருக்கும். அங்கு வழக்கம் போல எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம்“ என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், தமுக்கம் மைதானத்தில் கட்டப்படும் கட்டிடம் தரமானதாக இருக்க வேண்டும். கட்டிட பணிகள் குறித்து செப்டம்பர் மாதம் 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story