ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கான மறுதேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,525 மாணவர்களும், 7,506 மாணவிகளும் என மொத்தம் 14,031 பேர் எழுதினர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் 24-ந்தேதி நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்கு பதிவியியல் தேர்வுகளை சில மாணவர்கள் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறையின் மூலம் அறிவிக்கப் பட்டது. இதன்படி நேற்று ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இன்பேன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மறுதேர்வு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதியியல் பாடத்தினை 3 தேர்வர்களும், கணக்கு பதிவியியல் பாடத்தினை 14 தேர்வர்களும் என மொத்தம் 17 பேர் மறுதேர்வு எழுதினர். இதில் 13 தனித்தேர்வர்களும், 4 பள்ளி மாணவர்களும் அடங்குவர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வர்கள் சிரமப்படாத வகையில் அவர்களது இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே தேர்வு எழுத ஏதுவாக 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆய்வு
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலமாக தேர்வு எழுதுவோர் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, தாசில்தார் முருகவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story