கன்னியாகுமரி அருகே கடல் சீற்றத்தால் உருக்குலைந்த தூண்டில் வளைவு விரைந்து சீரமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்
கன்னியாகுமரி அருகே தொடரும் கடல்சீற்றத்தினால் கோவளத்தில் தூண்டில் வளைவு உருக்குலைந்து காணப்படுகிறது. அதனை விரைந்து சீரமைக்க மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடி தொழிலாகும். இந்த கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளதால் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாத காலமும் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும்.
இந்த மாதங்களில் இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாது. இதனால் அவர்கள் தங்களது வள்ளங்களை சின்னமுட்டத்தில் நிறுத்தி வைத்து மீன்பிடிதொழிலை செய்வார்கள். அடுத்த 6 மாதகாலம் மட்டுமே கோவளம் மீனவர்கள் தங்களது சொந்த ஊரில் மீன்பிடி தொழிலை செய்ய முடியும்.
தூண்டில் வளைவு
கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பை தடுக்க கோவளம் கடற்கரையில் மேற்கு பக்கம் கடந்த 2002-ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் ரூ.4 கோடி செலவில் 225 மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில்வளைவு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கோவளம் மீனவர்கள், ராட்சத அலையில் இருந்து பாதுகாப்பாக கடலில் மீன்பிடிதொழில் செய்துவந்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்ற பேரலையின் கோரத்தாண்டவத்தின் போது இந்த தூண்டில்வளைவு தான் கோவளம் கடற்கரை கிராம மீனவ மக்களை காப்பாற்றியது. அப்போது இந்த தூண்டில் வளைவு 100 மீட்டர் தூரம் உடைந்து சேதம் அடைந்தது. அதன்பிறகு இந்த தூண்டில் வளைவு இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கோவளம் மீனவர்கள் பாதுகாப்புடன் கடலில் மீன்பிடிதொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சீரமைக்க வேண்டும்
எனவே, தூண்டில் வளை வை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவளம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள தூண்டில் வளைவு மேலும் உடைந்து உருக்குலைந்து போய் கிடக்கிறது.
இதற்கிடையில் கோவளம் கடற்கரையில் இருந்து வள்ளத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அந்தோணி என்ற மீனவர் கரையில் இருந்து 150 மீட்டர் தூரம் சென்ற போது கடல் சீற்றத்தால் படகில் இருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி பலியானார். இதற்கு காரணம் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்து கிடப்பது தான் என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீனவர்கள் வலியுறுத்தல்
எனவே, சேதம் அடைந்த தூண்டில் வளைவை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன், கிழக்கு பக்கம் இயற்கையாகவே அமைந்துள்ள பாறைகளை இணைத்து புதிதாக மேலும் ஒரு தூண்டில் வளைவு அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவளம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story