மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது
மத்திய அரசின் இந்திய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
இந்திய மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ உடனடியாக கைவிட வேண்டும். மின்சாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் தம்பிராஜா உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இலவச மின்சாரம்
ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடருவதற்கு மத்திய, மாநில அரசுகள் சட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். கைத்தறி, விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகை கட்டண மின்சாரம் தொடரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் அலங்காநத்தத்தில் சிவக்குமார் தலைமையிலும், சூரியம்பாளையத்தில் ஆதிநாராயணன் தலைமையிலும், காடச்சநல்லூரில் செல்லமுத்து, நல்லாகவுண்டர் ஆகியோர் தலைமையிலும், உஞ்சனையில் ஜெயமணி தலைமையிலும், ராமாபுரத்தில் பூபதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் வீடுகளிலும், விளை நிலங்களிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூரில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் பொருட்கள் வணிக அவசர சட்டம் போன்ற விவசாயிகளுக்கு பாதகமான அவசர சட்டங்களை திரும்ப பெற வேண்டி, இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகளின் தோட்டத்தில் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர் தலைமை தாங்கினார். காடச்சநல்லூர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். பொன்னுசாமி, கணேசன், செங்கோட்டையன், பாலகுமார் மற்றும் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story