மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் கருப்பு கொடி போராட்டம்


மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி   விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் கருப்பு கொடி போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 10:26 AM IST (Updated: 28 July 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மின்சார சட்ட திருத்தம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இதில் சங்க மாநில செயலாளர் டில்லிபாபு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பிரிவு நிர்வாகி கிள்ளிவளவன், சி.பி. ஐ.எம்.எல். விவசாய சங்க தலைவர் கோவிந்தராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இண்டூர்-நல்லம்பள்ளி

இதேபோல் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குப்புசாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அரூரில் விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் கோவிந்தன் தலைமையிலும், இண்டூரில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையிலும் போராட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் அப்புனு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். பாப்பாரப்பட்டியில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை ஒட்டி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

இந்த போராட்டத்தில் விவசாய விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், வேளாண்மை சேவைகள் தொடர்பான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு பாதகமான பல்வேறு அம்சங்கள் இருப்பதால் அவற்றை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story