மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி   விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 10:43 AM IST (Updated: 28 July 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறகோரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராயக்கோட்டை,

மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை 4 ரோடு அண்ணா சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அனுமப்பா, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக் ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் கலந்து கொண்டு பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சின்னராஜ், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, முன்னாள் நகர செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மின்சார சட்ட திருத்தத்தை திரும்ப பெறகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் அனுமப்பா தலைமை தாங்கினார். இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வரதராஜ் ஆகியோர் பேசினார்கள்,

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பேரூர் செயலாளர் சீனிவாசன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர் வெங்கடசாமி, துணை செயலாளர் சக்திவேல், நஞ்சப்பன், பன்னீர் செல்வம், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி

சூளகிரி அருகே சாமனப்பள்ளியில் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாமனப்பள்ளி கூட்டு ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சூளகிரி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் அணி வட்டத்தலைவர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு எதிராக புதிய சட்டங்களை நிறைவேற்றக்கூடாது. பெட்ரோல் பதுங்கு குழாய்கள் பதிக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஊத்தங்கரை

இதேபோல் ஊத்தங்கரையில் 4 ரோடு சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கபிலன், சிங்காரப்பேட்டை பகுதி குழு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர துணை செயலாளர் பூபதி, மாதர் சங்க நிர்வாகி ரஷ்யாபேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மின்சார சட்ட திருத்ததை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story