மாவட்டத்தில் ரூ. 6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கை கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார்


மாவட்டத்தில்   ரூ. 6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கை   கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 28 July 2020 10:50 AM IST (Updated: 28 July 2020 10:50 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயார் செய்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டிற்கு ரூ.6,435 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கையை வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் வெளியிட்டார். திட்ட அறிக்கையின் முதல் பிரதியை இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் நஸ்ரீன் சலீம், முன்னோடி வங்கி இந்தியன் வங்கி மேலாளர் பாஸ்கர், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன மேலாளர் சங்கர்கணேஷ், அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வேளாண்மைக்கு முன்னுரிமை

இந்த திட்ட அறிக்கை, நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை பின்பற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பிரிவுகளுக்கு (விவசாயம் மற்றும் தொழில் முதலான) ரூ.6,435 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய துறையான விவசாயத்திற்கு ரூ.4,430 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.1,037 கோடி கடன் தர உத்தேசிக்கப்பட்டுள்ளது. மரபுசாரா எரிசக்தி துறைக்கு ரூ.18 கோடியும், கல்விக்கடனாக ரூ.110 கோடியும், வீட்டுக்கடனுக்கு ரூ.310 கோடியும் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கியாளர்கள் கடன் திட்டத்தை திட்டமிட்டப்படி செயல்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும். அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்திட வங்கியாளர்களும், அரசு அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 2020-21-ம் ஆண்டின் ஆண்டறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.

Next Story