ஊராட்சி செலவினங்கள் செய்வதில் சிரமம்: பொதுக்கணக்கில் நிதி விடுவிக்க வேண்டும் கலெக்டரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்


ஊராட்சி செலவினங்கள் செய்வதில் சிரமம்:   பொதுக்கணக்கில் நிதி விடுவிக்க வேண்டும்   கலெக்டரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 July 2020 11:08 AM IST (Updated: 28 July 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி செலவினங்களை செய்வதில் சிரமம் இருப்பதால் பொதுக்கணக்கில் நிதியை விடுவிக்கவேண்டும் என்று கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி பொது நிதியில் போதிய தொகையில்லாமல் ஊராட்சி செலவினங்கள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொது நிதிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 14-வது நிதிக்குழு மானியம் தொடர்பான வேலைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் வழியாக செய்ய வேண்டும். ஊராட்சிகளால் செய்யப்படும் செலவினங்களின் பணபரிவர்த்தனைக்கு தற்சமயம் வழங்கப்பட்டுள்ள நடைமுறையை கொரோனா காலம் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஊராட்சிகளில் செய்யப்பட்டுள்ள குடிமராமத்து பணிக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் ஊராட்சிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களின் பரிந்துரைப்படி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும்

தஞ்சை மாவட்ட பெண்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், வங்கி தவணை கட்ட 6 மாத கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும். இந்த 6 மாத தவணைகள் கட்டாததற்கு வட்டி மற்றும் வட்டிக்குமேல் வட்டி போடுவதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல் நுண்கடன் நிறுவனங்களின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மாதர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்

விடுதலைசிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல் துரை.அன்பரசன் தலைமையில் மாரனேரி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மாரனேரியில் உள்ள அய்யனார் ஏரியில் தரிசுப்பகுதியில் நாங்கள் 80 பேர் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது நெல் நடவு செய்துள்ளோம். இன்னும் 30 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதனை அகற்ற முயற்சி செய்கிறார்கள். எனவே சூழலை கருத்தில் கொண்டு நடவு செய்த நெற்பயிர்களை அறுவடை வரை அழிக்காமல் பொறுத்திருந்து அடுத்த போகத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story