அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி   விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 12:16 PM IST (Updated: 28 July 2020 12:16 PM IST)
t-max-icont-min-icon

அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரம் மற்றும் வேளாண் அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சோமையா தலைமை தாங்கினார்.

இதில் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு, கருப்பு கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

ஆலங்குடி, ஆவுடையார்கோவில்

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலங்குடியில் வடகாடு முக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள், அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள் கருப்பு கொடியேந்தி கலந்து கொண்டனர். ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆவுடையார்கோவில் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான உதயம் சண்முகம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருப்பு கொடியேந்தி, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

Next Story