கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவை தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என சலவை தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கரூர்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து, அதில் மனுக்களை போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு வண்ணார் பேரவை மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் வந்தவர்கள் கொண்டு வந்த மனுவில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சலவை தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சலவை தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழில் வாரியத்தில் பதிவு செய்யாத சலவை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும், என கூறியிருந்தனர்.
போலீஸ் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்
தாந்தோணிமலை தென்றல் நகரில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொண்டு வந்த மனுவில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாங்கள், பல ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2-ம் நிலை போலீசார் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு வந்த மனுவில், எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று, உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றுள்ளோம். இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் 1000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஏற்கனவே அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்ற எங்களை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story