நடிகர் ரஜினிகாந்த் ‘இ-பாஸ்’ பெற்றே காரில் பயணம் சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்


நடிகர் ரஜினிகாந்த் ‘இ-பாஸ்’ பெற்றே காரில் பயணம் சென்னை மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 29 July 2020 3:40 AM IST (Updated: 29 July 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையாக ‘இ-பாஸ்’ பெற்றே காரில் பயணம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில், ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாகவும், பரிசோதனையை 3 மடங்கு அதிகப்படுத்தியதன் காரணமாகவும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தினசரி 12 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை சென்னையில் 23 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்

மூச்சு திணறல்

தற்போது வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் ஆய்வு செய்யும் போது, மூச்சுத் திணறல் அறிகுறி இருக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலே, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. உயிர்காக்கும் முயற்சியாக இதை ஆரம்பித்துள்ளோம். இது போன்று தினமும் 15 முதல் 20 பேர் களப்பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதித்து வருகிறோம். இதற்காக அனைத்து அரசு மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.3 சதவீதம் வரை இறப்பு விகிதத்தை குறைக்க முடியும்.

ரஜினிகாந்த் ‘இ-பாஸ்’ வாங்கினார்

சென்னையில் இன்றுவரை அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளுக்கு தட்டுப்பாடோ, அதிக விலை ஏற்றமோ எங்கும் இல்லை. திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கூடுதல் வசதி செய்து தர சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினிகாந்த் ‘இ-பாஸ்’ வாங்கி காரில் பயணம் செய்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் தற்போது 85 முதல் 90 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story