கொரோனா விதிமுறைகள் மீறல்: விழுப்புரத்தில் 2 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி இயங்கிய 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் நகரத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
காய்கறி மார்க்கெட், கடைவீதிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. எனவே, இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குழுக்கள் அமைத்து முக்கிய சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, நேற்று விழுப்புரம் நகராட்சி வருவாய் அலுவலர் ஜெயவேல், ஆய்வாளர் சோமசுந்தரம் சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் மற்றும் ஊழியர்கள் விழுப்புரம் நகரில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
கடைகளுக்கு ‘சீல்’
அப்போது கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரண்டு உள்ளனரா? என்று தீவிரமாக கண்காணித்தனர். இதில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை, பர்னிச்சர் கடை ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் நகராட்சி ஊழியர்கள் ‘சீல்’ வைத்தனர். மேலும் நடைபாதைகளில் கடை வைத்திருந்தவர்களையும், முககவசம் அணியாமல் கடைகளுக்கு வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
Related Tags :
Next Story