நிவாரணம் வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த பெண் திடீரென மாயமானதால் பரபரப்பு


நிவாரணம் வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த பெண் திடீரென மாயமானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2020 12:27 AM GMT (Updated: 29 July 2020 12:27 AM GMT)

நிவாரணம் வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த பெண் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் வந்தார். அவரை கலெக்டர் அலுவலக வரவேற்பறை பெண் ஊழியர் அழைத்து விசாரித்தார். அப்போது அந்த பெண் கூறியதாவது:-

எனது பெயர் பார்வதி (வயது 22), கணவர் பெயர் செந்தில் (28). எங்களுக்கு ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உண்டு. சேலத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பெருமுகைக்கு வந்து கல் உடைக்கும் தொழில் செய்து வந்தோம். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்து விட்டார்.

கல் உடைத்து அதில் வரும் வருமானத்தில் 3 குழந்தைகளையும் காப்பாற்றி வந்தேன். தற்போது கொரோனா தொற்று காரணமாக சரியாக வேலை கிடைப்பதில்லை. எனவே பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனவே கலெக்டரை சந்தித்து நிவாரணம் வழங்கும்படி கோரிக்கை வைப்பதற்காக குழந்தைகளுடன் வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

திடீர் மாயம்

அதைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியர் இதுகுறித்து கலெக்டர் அலுவல மேலாளருக்கு தகவல் தெரிவிக்க 2-வது மாடிக்கு சென்றார். பார்வதி, கலெக்டர் கார் நிற்கும் இடத்தில் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர், பார்வதி குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் சமூக நலத்துறை மூலம் குழந்தைகளை அரசு காப்பகத்தில் தங்க வைத்து படிக்க வைக்கலாம் என்று பார்வதியிடம் தெரிவித்தனர்.

குழந்தைகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய பார்வதி உடனடியாக யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரத்துக்கு பின்னர் அங்கு வந்த வரவேற்பறை பெண் ஊழியர், அவர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்களை கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் மேம்பாலம் பகுதிகளில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தேடிப்பார்த்தனர். எனினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நிவாரணம் அளிக்க வந்த பெண் திடீரென மாயமானதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story