விவசாயிகள் மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி


விவசாயிகள் மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி
x
தினத்தந்தி 29 July 2020 6:00 AM IST (Updated: 29 July 2020 6:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கிடைக்கின்ற மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

காட்பாடி,

காட்பாடி தாலுகாவில் பிரம்மபுரம், கண்டிப்பேடு, மெட்டுகுளம் கஞ்சாலூர் ஆகிய பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில திட்டங்களில் விவசாயிகளுக்கு முழு மானியமும், சில திட்டங்களில் 30 சதவீதம், 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வேண்டும். சோலார் பவர் மோட்டார் மூலம் பம்ப்செட் இயங்கும் முறை, பாலிஹவுஸ் மூலம் பயிர் வளர்ப்பதையும் பார்வையிட்டேன். பாலிஹவுஸ் மூலம் பயிர்களை வளர்ப்பதால் பூச்சிகள் தாக்காது. மகசூல் மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும்.

மழைநீரை சேமித்து...

மழைநீரை பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் மழை நீரை நம்பமுடியாது. பருவமழை பொய்த்து விட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் விவசாயிகள் கிடைக்கின்ற மழை நீரை சேமித்து பயன்படுத்தவேண்டும். மழை நீரை சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். தற்போது காட்பாடி பகுதியில் நல்ல மழை பெய்து உள்ளது. அதனால் பண்ணை குட்டைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன. வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது காட்பாடி தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் கோபி, மெட்டுகுளம் ஊராட்சி முன்னாள் தலைவர் நம்பிக்கை ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story