ரிஷிவந்தியத்தில் ஊராட்சி செயலாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் ஊராட்சி செயலாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ரிஷிவந்தியம் ஊராட்சி செயலாளர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களை தவிர மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், இவர்களின் வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் சிறப்பு நோய்த் தொற்று பரிசோதனை முகாம் நடத்தி 180 பேரின் உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.
சங்கராபுரம் வட்டத்தில் முதல் முறையாக ஊராட்சி செயலாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையொட்டி, சங்கராபுரம் தாசில்தார் நடராஜன், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் வணிகர்களுடன் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில், நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஏதுவாக ரிஷிவந்தியத்தில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று(புதன்கிழமை) மதியம் முதல் வருகிற 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை அடைப்பதற்கு அனைத்து வணிகர்களும்ஒப்புக்கொண்டனர்.
Related Tags :
Next Story