தற்காலிக சந்தையில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம்: நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
வடசேரி தற்காலிக சந்தையில் கடைகள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
கொரோனா பரவியதை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வந்த கனகமூலம் சந்தை மூடப்பட்டது. அதற்கு பதிலாக வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தையாக செயல்பட்டு வந்தது. இங்கும் வியாபாரிகள், போலீசார் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த தற்காலிக சந்தையும் மூடப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், வியாபாரிகளின் நலன் கருதி மீண்டும் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தையை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. மேலும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவதில் குளறுபடி நடப்பதாக தெரிகிறது. வடசேரி கனகமூலம் சந்தையில் முறையாக வாடகை செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் கடை ஒதுக்கப்படாமல், மற்றொரு தரப்பை சேர்ந்த வியாபாரிகளுக்கு கடைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வியாபாரிகள் முற்றுகை
இதனை தொடர்ந்து கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் நாகராஜன், கண்ணன் மற்றும் வியாபாரிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, கனகமூலம் சந்தையில் கடை எடுத்து இருக்கும் வியாபாரிகள் ரூ.1 லட்சம் மற்றும் 12 மாத வாடகை பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இவ்வாறு சரியாக வாடகை செலுத்திய வியாபாரிகளுக்கு வடசேரி தற்காலிக சந்தையில் கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆணையர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை (அதாவது இன்று) கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story