இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
இ-பாஸ் இலலாமல் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் கூறினார்.
சேலம்,
கொரோனா தொற்று பரவலை தடுக்க சேலம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். அதில் இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனிடையே மாவட்டத்தில் சில போலீசார் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மன சோர்வு ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் பாதுகாப்பு
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர். ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காலி இடங்களில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.இதைத்தொடர்ந்து சூப்பிரண்டு தீபா கனிக்கர் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் அனைத்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லை பகுதிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story