இண்டூரில் விவசாயி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை


இண்டூரில் விவசாயி தற்கொலை:   உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்   உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 29 July 2020 10:37 AM IST (Updated: 29 July 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இண்டூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி, 

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவருடைய தந்தைக்கு சொந்தமான நிலத்தை வாங்கிய ஒருவர் பத்திரப்பதிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறி மேலும் 1½ ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பதிவு செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய உறவினர்கள் நேற்று முன்தினம் இண்டூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ரத்தினம் மற்றும் 3 நில புரோக்கர்கள் என 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும், உடலை வாங்க மறுப்பு தெரிவித்தும் இண்டூர் பஸ் நிலையத்தில் ராஜாவின் உறவினர்கள் தரையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே பிரேத பரிசோதனைக்கு பின் ராஜாவின் உடலை பெறுவோம் என்று அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி உதவி கலெக்டர் தணிகாசலம், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன் ஆகியோர் இண்டூருக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புகாருக்குள்ளானவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களை உரிய விசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story