8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் பாப்பம்பாடியில் வயலில் இறங்கி கோஷம் எழுப்பினர்
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பம்பாடியில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பொம்மிடி,
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்த திட்டத்தை ரத்து செய்தது. இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விவசாயிகள் போராட்டம்
இந்த நிலையில் 8 வழிச்சாலை தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடி கிராமத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், பெண்கள் கலந்து கொண்டு வயலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்தம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் பங்கேற்ற விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story