நாகையில் சூறைக்காற்றுடன் கன மழை கலெக்டர் அலுவலகத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன
நாகையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன.
நாகப்பட்டினம்,
நாகையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டே இருந்தது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த இந்த கனமழை 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் நாகை மெயின் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.
மரங்கள் முறிந்து விழுந்தன
குறைக்காற்று வீசியதால் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மரங்கள் முறிந்து அங்குள்ள மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் கம்பிகள் அறுந்து தொங்கின. இதுகுறித்து தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் அங்கு வந்து விடிய, விடிய சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த கனமழை காரணமாக நாகை பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதேபோல நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, திட்டச்சேரி, மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
நாகை 39.40, திருப்பூண்டி 45.20, தலைஞாயிறு 15.80, வேதாரண்யம் 5.20, மயிலாடுதுறை 43.20, சீர்காழி 5.20, கொள்ளிடம் 40, தரங்கம்பாடி 26, மணல்மேடு 29.
Related Tags :
Next Story