திருப்பூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க மானியம் கலெக்டர் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க மானியம்   கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 July 2020 11:43 AM IST (Updated: 29 July 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் பயிர்களான நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள் 96 ஆயிரத்து 632 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. மனிதன் ஆரோக்கியமாக வாழ அரிசி உணவுடன் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான கம்பு, ராகி, சோளம்,வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவற்றை தினமும் பயன்படுத்துவது அவசியம். சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேளாண்துறை மூலமாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சோளத்துக்கு முன்னோடி தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் வட்டாரத்துக்கு 50 ஹெக்டேர், அவினாசி வட்டாரத்துக்கு 70 ஹெக்டேர் மற்றும் ஊத்துக்குளி வட்டாரத்துக்கு 50 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்புக்கு முன்னோடி தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.மடத்துக்குளம் வட்டாரத்துக்கு 25 ஹெக்டேர், உடுமலை வட்டாரத்துக்கு 25 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியம்

சாமை பயிரிட முன்னோடி தொகுப்பு செயல்விளக்க திடல் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. உடுமலை வட்டாரத்துக்கு 25 ஹெக்டேர் பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீரிய ஒட்டுரக சோளம் விதை 15 குவிண்டால் வழங்கப்படும். இதற்கு ஒரு கிலோவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். வீரிய ஒட்டுரக கம்பு விதை 10 குவிண்டாலுக்கு கிலோவுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.உயர் விளைச்சல் ரக சோளம் விதை 100 குவிண்டாலுக்கு கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும். உயர்ரக கம்பு விதை 20 குவிண்டாலுக்கு கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும்.

உயர் விளைச்சல் ரக சோளம் விதை உற்பத்திக்கு 230 குவிண்டால் ஒதுக்கீடு செய்யப்பட்டு கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும். உயர்விளைச்சல் ரக கம்பு விதை உற்பத்திக்கு 40 குவிண்டால் ஒதுக்கீடு செய்யப்பட்டு கிலோவுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படும்.இதுபோல் நுண்நுட்டசத்து, உயிர் உரங்கள், பூச்சி மருந்து, களைக்கொல்லி, கையினால் இயக்கக்கூடிய தெளிப்பான்கள் ஆகியவற்றுக்கும் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவிகள் பெற சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story