கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் திருச்சியில் பரபரப்பு


கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி   போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்   திருச்சியில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2020 6:24 AM GMT (Updated: 29 July 2020 6:24 AM GMT)

கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, 

திருச்சி அருகே திருவெறும்பூர் எழில்நகர் கன்னிமார்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வி (வயது 28). இவர் மலைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். அப்போது, இவருக்கும், அங்கு வேலை செய்து வந்த கண்ணன்(30) என்பவருக்கும் காதல் உருவானது. பின்னர் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வயலூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது, முத்துச்செல்வியின் பெற்றோர் 15 பவுன் நகையும், சீர்வரிசையும் வரதட்சணையாக கொடுத்தனர்.

இந்தநிலையில் கூடுதலாக வரதட்சணை கேட்டு முத்துச்செல்வியை கண்ணனின் குடும்பத்தினர் அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து, தனது கணவர், மாமனார், மாமியார், கொழுந்தன் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கணவர் குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 பேர் முத்துச்செல்வியை அடித்து உதைத்து மானபங்கம் செய்துள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் மனமுடைந்த முத்துச்செல்வி நேற்று காலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தான், பாட்டிலில் கொண்டுவந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர் குடும்பத்தினரை கைது செய்யவேண்டும். இந்த வழக்கில் சரியான விசாரணை நடத்தாத திருவெறும்பூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷம் போட்டுக்கொண்டே தீக்குளிக்க முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத போலீசார், உடனே ஓடி வந்து, அவர் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி வீசியதுடன், அவர் உடலில் தண்ணீரை ஊற்றி, அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கணவர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முத்துச்செல்வியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தெரிவித்த தகவலின் அடிப்படையில் முழு விசாரணை நடத்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து முத்துச்செல்வியின் கணவர், கொழுந்தன், மாமனார், மாமியார் ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து முத்து செல்வியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவரது கணவர் கண்ணன் உள்பட 4 பேர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்ணனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.

Next Story