வங்கி ஊழியர் உள்பட 7 பேருக்கு புதிதாக கொரோனா சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத டீக்கடைக்கு ‘சீல்’
மாவட்டத்தில் வங்கி ஊழியர் உள்பட 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குளித்தலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கரூர் வையாபுரி நகரை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது குடும்பத்தை சேர்ந்த 72 வயது முதியவருக்கும், 48 வயதுடைய மற்றொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கரூர் மாவட்டம் ரெட்டியாபட்டியை சேர்ந்த 27 வயது நிரம்பிய வங்கி ஊழியர் ஒருவருக்கும், தட்டாங்காட்டை சேர்ந்த 31 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பெரியகுளத்து பாளையத்தை சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவருக்கும், நெரூரை சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கும், காயத்திரி நகரை சேர்ந்த 84 வயது மூதாட்டி ஒருவருக்கும் என 7 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
28 பேர் டிஸ்சார்ஜ்
இந்தநிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் பூரண குணம் அடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
குளித்தலையில் டீக்கடைக்கு ‘சீல்’
குளித்தலையில், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளரின் மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த கடை மற்றும் அவரது வீடு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் நேற்று ஆய்வு செய்தார். அதனைதொடர்ந்து குளித்தலை நகரப்பகுதியில் உள்ள கடைகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது குளித்தலை பஸ்நிலையம் அருகே சினிமா தியேட்டரின் எதிரே உள்ள ஒரு டீக்கடையில் சமூக இடைவெளியின்றி கூட்டமாக பலர் நின்றதை பார்த்த அவர், அந்த கடைக்கு ‘சீல்’வைக்க உத்தரவிட்டார்.
தரைக்கடைகளுக்கு கட்டுப்பாடு
குளித்தலை காவிரி நகர் பகுதியில் நூலகம் அமைந்துள்ள சாலையில் காய்கறிகள், தேங்காய், பூண்டு போன்ற பொருட்கள் விற்கும் தரைக் கடைகள் உள்ளன. இக்கடைகள் இரவு வரையிலும் திறந்து வைக்கப்படுவதாலும், இங்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதால் நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருந்து வந்தது. இதனை தடுக்கும்பொருட்டு இப்பகுதியில் உள்ள தரைக்கடைகள் அனைத்தும் மதியம் 12 மணிவரை மட்டுமே நடத்தப்படவேண்டுமென நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Related Tags :
Next Story