டாஸ்மாக் கடைகளில் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்


டாஸ்மாக் கடைகளில் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்
x
தினத்தந்தி 29 July 2020 5:39 PM GMT (Updated: 29 July 2020 5:39 PM GMT)

டாஸ்மாக் கடைகளில் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்.

வேலூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்த ராஜா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், கொரோனா காலம் முடியும்வரை மாதம் ரூ.10 ஆயிரம் கூடுதலாக சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள ஊழியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து தமிழகம் முழுவதும் நேற்று பணிபுரிந்தனர்.

அதன்படி வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களும் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், இதுதொடர்பாக தொழிற்சங்க கூட்டமைப்பினரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வலியுறுத்தியும் வருகிற 3-ந் தேதி வரை இந்த பேட்ஜ் அணிந்து பணிபுரிய உள்ளோம். 3-ந் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story