வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்


வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட்
x
தினத்தந்தி 29 July 2020 7:58 PM GMT (Updated: 29 July 2020 7:58 PM GMT)

வேலூரில் பலத்த மழை: சேறும், சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நேதாஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன. மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன. வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் இயங்கும் தற்காலிக மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் தகர ஷீட்டுகளால் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூரில் பலத்த மழை பெய்தது. அதனால் மழைநீர் பள்ளி மைதானத்தில் இருந்து வெளியே செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கியது. மேலும் கடைகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது. தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. அதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். தற்காலிக மார்க்கெட்டில் மழைநீர் தேங்காத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.


Next Story