தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் பேட்டி


தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி   முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் பேட்டி
x
தினத்தந்தி 30 July 2020 5:15 AM IST (Updated: 30 July 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி என்று நத்தம் ஆர்.விசுவநாதன் கூறினார்.

கோபால்பட்டி,

அ.தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக, முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான நத்தம் ஆர்.விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நத்தம் ஆர்.விசுவநாதன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக என்னையும், மேற்கு மாவட்ட செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச்செயலாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக வேடசந்தூர் பரமசிவம் எம்.எல்.ஏ., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளராக முன்னாள் எம்.பி., குமாரசாமி ஆகியோரை நியமனம் செய்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி

மேலும் கட்சி தலைமை, நிர்வாகிகள், தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப நிச்சயமாக அனைவரும் பணியாற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் வகையில், இப்போதே வியூகம் அமைத்து பணியாற்றுவோம். கட்சி பணியோடு, மக்கள் பணியையும் சேர்த்து செயலாற்றி மக்களின் பேராதரவை பெற்று திண்டுக்கல் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Next Story