செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு


செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 July 2020 6:51 AM IST (Updated: 30 July 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார்.

செஞ்சி,

செஞ்சி பகுதியில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செஞ்சி தாலுகா அலவலகத்தில் கலெக்டர் அண்ணாதுரை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சப்-கலெக்டர் அனு, தாசில்தார் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அறவாழி, பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் உள்பட பலர் கலந்து கெணண்டனர். கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

காய்கறி மார்க்கெட்

தொடந்து, கலெக்டர் அண்ணாதுரை செஞ்சி கடைவீதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நெரிசல் மிகுந்து இருந்ததை பார்த்த அவர், அங்கு செயல்பட்டு வரும் காய்கறி மற்றும் பழக்கடைகளை தற்காலிகமாக செஞ்சி பஸ் நிலையத்தில் வைத்துக் கொள்ளவும், மோட்டார் சைக்கிள்களை பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நிறுத்துவதற்கு பயன்படுத்தி கொள்ளவும் வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் கடைவீதியில் உள்ள நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தவும், திருவண்ணாமலை சாலையில் உள்ள கடைகளுக்கு முன்பு போட்டு வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களையும் அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முன்னதாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

விக்கிரவாண்டி

முன்னதாக விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கக்கன்ஜி நகரில் 5 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பகுதியை நேற்று கலெக்டர் அ ண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார். அங்கு வசிப்பவர்களுக் ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும் எனவும் , தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சத்து மாத்திரைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் தாசில்தார் பார்த்தீபன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர்கள் ராமகிருஷ்ணன், அர்ச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்த கோபாலகிருஷ்ணன், எழிலரசு, சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ்கிங்ஸ்லி , சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் , கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், சுகாதார ஆய்வாளர் பாபு, ஊராட்சி செயலாளர்கள் சுரேஷ்குமார், கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் தனிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் மற்றும் கிடங்கல்-2 அம்பேத்கர் தெரு, வரதப்ப நாயக்கர் தெரு, சிங்காரத்தோப்பு நாயக்கர் தெரு போன்ற இடங்களில் கலெக்டர் அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்தார். அங்கு மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சஞ்சீவிராயன் பேட்டை முதல் தெரு நாடார் திருமண மண்டபத்தில் நடந்த மருத்துவ முகாமையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, திண்டிவனம் தாசில்தார் (பொறுப்பு) செல்வகுமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ், வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, டாக்டர்கள் செந்தில்குமார், விஷ்ணுகுமார், அபிஷேக், கிராம நிர்வாக அலுவலர்கள் சதாம் பிரதாப், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story