மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெற புதிய நடைமுறை


மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்   வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெற புதிய நடைமுறை
x
தினத்தந்தி 30 July 2020 2:37 AM GMT (Updated: 30 July 2020 2:37 AM GMT)

மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, 

பஸ், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களை இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தகுதிச்சான்று(எப்.சி.) பெறவேண்டியது அவசியம். அவ்வாறு செல்லும்போது அந்த வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் சரிவர இருக்கிறதா என சோதனை செய்து, அதற்கான தகுதிச்சான்றிதழ் வழங்குகிறார்கள். இதுபோல் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னர் அதனை புதுப்பிக்கும் போதும் அதற்கான ஆவணங்களை சரி பார்த்து மீண்டும் அதற்கான தகுதிச்சான்றிதழும் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் வாகனங்களை நேரடியாக எடுத்துச் செல்லாமல் சிலர் அதற்கான தகுதி சான்றிதழ்கள் பெறுவதாக புகார்கள் எழுந்தது. இதனை கண்டறியும் விதமாக தற்போது ஒரு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தகுதிச்சான்றிதழ் பெற போகும் போது வாகன ஆவணங்களுடன், வாகனத்தையும் கண்டிப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும். அங்கு கொண்டு சென்ற வாகனத்தை, ஒரு செயலி மூலம் புகைப்படமாக எடுத்து பதிவேற்றம் செய்யப்படுகிறது.

புகைப்படம்

மதுரையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்போது இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வண்ணம், உரிமையாளர்களின் பெயர், முகவரி, இருக்கையின் அளவு, வாகன பதிவு எண், இடதுபக்க வாகன குறிப்பு, பிரதிபலிப்பு பட்டை ஆகியவை புகைப்படமாக எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்து அந்த வாகனத்திற்கான தகுதிச்சான்று வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் கூறுகையில், தமிழகத்தில் சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த நடைமுறை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு விட்டது. தற்போது மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பணிச்சுமை

இந்த புதிய நடைமுறை மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருந்தாலும் இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஏனென்றால் இந்த நடைமுறை மூலம் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இதற்காக எம் வாகன் என்ற எப்.சி. செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாகனத்தின் முன்பு, பின்பு, இடது, வலது பக்கங்களில் 5 புகைப்படங்கள் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பின் இந்த வாகனத்தை இயக்கி ஆவணங்களை சரிபார்த்து ஒரே நாளில் அதற்கான தகுதிச் சான்று வழங்கப்படுகிறது. வாகனங்களை நேரடியாக பார்க்காமல் இனி அதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story