மாவட்டம் முழுவதும் 90 சதவீத கிராமங்களில் கொரோனா பரவல் பஞ்சாயத்து அளவில் தடுப்புக்குழுக்கள் தேவை


மாவட்டம் முழுவதும் 90 சதவீத கிராமங்களில் கொரோனா பரவல்   பஞ்சாயத்து அளவில் தடுப்புக்குழுக்கள் தேவை
x
தினத்தந்தி 30 July 2020 8:21 AM IST (Updated: 30 July 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களில் 90 சதவீத கிராமங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் பஞ்சாயத்து அளவில் நோய் தடுப்புக்குழுக்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நகர்புறங்களை விட கிராமப்பகுதிகளிலேயே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துக்களில் உள்ள 1,800 கிராமங்களில் 90 சதவீத கிராமங்களில் நோய் பரவல் ஏற்பட்டுள்ள நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நகர் பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவித்துள்ள நிலையில் கிராமப்பகுதிகளில் இம்மாதிரியான நடைமுறை ஏதும் பின்பற்றப்படவில்லை.

இதனால் தொடர்ந்து கிராமப்பகுதிகளில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கிராமப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை கண்காணிக்க உரிய உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் கிராமப்பகுதிகளில் முறையான நடவடிக்கைகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் கூறும் நிலை உள்ளது.

தேவை

எனவே மாவட்ட நிர்வாகம் கிராமப்பகுதிகளில் அதிகரித்து வரும் நோய் தொற்றை தடுக்க பஞ்சாயத்து அளவில் நோய் தடுப்புக்குழுக்களை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பாதிப்பு அடைந்த கிராம மக்களுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் கவனம் செலுத்தாவிட்டால் இந்த மாவட்டத்தில் அதிகரித்து வரும் நோய் தொற்றை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

Next Story