பாம்பன் தூக்குப்பாலத்தில் மீன்பிடி படகு மோதியது
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் மீன்பிடி படகு மோதி உரசியபடி நின்றது.
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க வரும் கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடந்து செல்ல வேண்டும். ஆனால் ஏராளமான மீன்பிடி படகுகள் தூக்குப்பாலம் திறக்காமல் இருக்கும்போது படகின் பின்பகுதியில் உள்ள உயரமான கம்பியை கழற்றி வைத்துவிட்டு ஆபத்தான நிலையில் தூக்குப்பாலத்தை கடந்து செல்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல 8 மீனவர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாம்பன் கடல் பகுதிக்கு வந்த மீன்பிடி படகு ஒன்று வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திறக்கப்படாத தூக்குப்பாலத்தை மீனவர்கள் படகில் கடந்து செல்ல முடிவு செய்தனர். அப்போது மீன்பிடி படகு தூக்குப்பாலத்தில் மோதி உரசியபடி நின்றது. தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் அந்த படகை பாதுகாப்பாக பின்னோக்கி இயக்கி மீண்டும் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தனர். தூக்குப்பாலத்தை கடக்க முயன்று பாலத்தில் மோதி உரசிய படகு குறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடி படகு மோதியதில் தூக்குப்பாலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story