ராமர்கோவில் கட்டுமான பணி: கன்னியாகுமரியில் இருந்து புனிதநீர், மண் அயோத்திக்கு அனுப்பப்பட்டது


ராமர்கோவில் கட்டுமான பணி:  கன்னியாகுமரியில் இருந்து புனிதநீர், மண் அயோத்திக்கு அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 30 July 2020 4:08 AM GMT (Updated: 30 July 2020 4:08 AM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து புனித நீர் மற்றும் மண் ஆகியவை எடுத்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி,

அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. அதற்கான பூமி பூஜை வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி, விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக்குமார் மற்றும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

புனித நீர் அனுப்பப்பட்டது

இந்தநிலையில் ராமர்கோவில் பூமி பூஜையின் போது பயன்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள புனித தலங்கள் மற்றும் தீர்த்தங்களில் இருந்து புனிதமானதாக கருதப்படும் புனிதநீர் மற்றும் புனித மண் ஆகியவற்றை இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சேகரித்து அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் இருந்தும் புனிதநீர் மற்றும் புனித மண் எடுக்கப்பட்டு அயோத்திக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம சங்கிலித்துறை கடற்கரையில் இருந்து சில்வர் தாம்பூலத்தட்டில் புனிதமண்ணும், சில்வர் குடத்தில் புனிதநீரும் சேகரிக்கப்பட்டது.

சிறப்பு பூஜை

முன்னதாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்பணி சிறப்பாக நடைபெற வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் பெறப்பட்டது. அந்த பிரசாதமும் புனித நீர் மற்றும் புனித மண்ணுடன் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட விசுவ இந்து பரிஷத் தலைவர் குமரேச தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், பஜ்ரங்தள் அமைப்பின் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராம்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story