மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த சாரல் மழை ஏற்காடு மலைப்பாதையில் தோன்றிய திடீர் அருவிகள்


மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த சாரல் மழை   ஏற்காடு மலைப்பாதையில் தோன்றிய திடீர் அருவிகள்
x
தினத்தந்தி 30 July 2020 4:42 AM GMT (Updated: 30 July 2020 4:42 AM GMT)

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய, விடிய சாரல் மழை பெய்தது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றின.

சேலம், 

கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி, ஆத்தூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி வரப்புகளை உடைத்து கொண்டு வெளியேறியது. இந்த மழையானது நேற்று காலை 9 மணி வரை லேசான தூறலுடன் நீடித்தது. விடிய, விடிய நீடித்த இந்த மழையால் காடையாம்பட்டி வட்டாரத்தில் 62 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஓமலூர் பகுதியில் 9.4 மி.மீட்டர் மழை பதிவானது.

திடீர் அருவிகள்

இந்த தொடர் மழையினால் ஏற்கனவே மேற்கு சரபங்கா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து டேனிஷ்பேட்டை ஏரி மற்றும் கோட்டேரிக்கு தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் மட்டுமன்றி ஏற்காடு மலையிலும் பலத்த மழை பெய்ததால் மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றின. ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் பகுதியில் ‘திடீர்‘ அருவிகள் தோன்றி உள்ளதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர்.

ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழை காரணமாக சரபங்கா ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் டேனிஷ்பேட்டை உள்கோம்பை பகுதியில் இருந்து வரும் மேற்கு சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், டேனிஷ்பேட்டை ஏரி, காடையாம்பட்டி கோட்டேரி ஆகிய நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் குரமச்சிகரடு வனப்பகுதியில் இருந்து வரும் கிழக்கு சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாலுகால் பாலம் குட்டை நிரம்பி காமலாபுரம் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் பாதிப்பு

மழை காரணமாக சேலத்தில் நேற்று காலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பலர் காலையில் குடையைப் பிடித்துக்கொண்டு அலுவலகங்களுக்கு வேலைக்கு சென்றதை காணமுடிந்தது.

புதிய பஸ் நிலையம் மற்றும் சின்னக்கடை வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறி விற்பனை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் குடைபிடித்தபடி காய்கறி விற்பனை செய்தனர். இதனால் காய்கறி வியாபாரிகளும் மிகவும் சிரமப்பட்டனர். நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்து சேலம் மாநகரில் மழை பெய்ததால், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பெரமனூர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒரு சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

தடுப்பணைகள் நிரம்பின

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், ஏற்காடு மலைப்பாதையில் பெய்த மழையின் காரணமாகவும் அங்காங்கே சிறு ஓடைகள் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. இதனால் ஏற்காடு மழை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகளும் நிரம்பி கன்னங்குறிச்சி புதுஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன் தங்கள் விளைநிலங்களில் நெல்லுக்கு நாற்றுவிடும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

மழையளவு

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:

ஆத்தூர்- 82, காடையாம்பட்டி- 62, தம்மம்பட்டி- 60, பெத்தநாயக்கன்பாளையம்-26, கெங்கவல்லி-22, ஏற்காடு- 19, வாழப்பாடி-14,மேட்டூர்- 12, ஓமலூர்- 9, எடப்பாடி- 9, சேலம்-5.

Next Story